ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் செவிடாகவும் குருடாகவும் இருக்கக் கூடாது

Published On Wednesday, 30 August 2017 | 21:08:00

மியன்மார் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு அரசின் மறைமுக ஆதரவில் இடம்பெறும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் செவிடாகவும் குருடாகவும் இருக்காது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என துருக்கி ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார். 

உலகின் மிகப் பெரிய 'நாடற்ற சிறுபான்மை சமூகமாக' அடையாளப்படுத்தப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான மியன்மார் இராணுவத்தின் வரம்பு மீறிய அட்டூழியங்கள், தாக்குதல்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன. 

உயிரைக் கையில் பிடித்த வண்ணம் கொத்துக் கொத்தாக மக்கள் பங்களாதேஷ் நாட்டை நோக்கி அடைக்கலம் கோரிப் படையெடுக்கின்றனர். 

ராக்கைன் மாநிலத்தில் இராணுவத்தினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டதாக சொல்லப்படும் தாக்குதலை அடுத்தே பதில் தாக்குதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மியன்மார் அரசு நியாயம் கற்பிக்க முனைந்தாலும் அரசின் அறிக்கையில் எவ்வகை உண்மையும் இருப்பதாக தெரியவில்லை. இதுவொரு திட்டமிட்ட இனவழிப்பு எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மியன்மார் இராணுவத்தின் கொடுமைகள் தாளாது 3,000 இக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஷ் நாட்டில் அடைக்கலம் கோரி தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  

“மியன்மாரில் அரசின் மறைமுக ஆதரவில் நடாத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் குருடாகவும் செவிடாகவும் பாசாங்கு செய்வது வருந்தத்தக்கது” என அர்துகான் மேலும் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இடம்பெறவிருக்கும் ஐ.நா. சபையின் பொது ஒன்றுகூடலில் மியன்மாரில் நடாத்தப்பட்டு வரும் இனச்சுத்திகரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கவிருப்பதாக அர்துகான் உறுதியளித்துள்ளார். மியன்மார் அரசின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக கண்டனங்களை பதிவு செய்வதாகவும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆதரவுடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாகவும், இது தொடர்பில் சர்வேதேச நாடுகள் உதவிக்கரங்களை நீட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பௌத்த பேரினவாதிகளால் வந்தேறிகள் என வசைபாடி ஒதுக்கப்பட்டு, வளங்கள் சூறையாடப்பட்ட நிலையில் வாழும் மியன்மாரின் ராக்கைன் மாநில சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கடந்த சில தினங்களாக தொடரும் தாக்குதல்கள் சர்வதேச கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. 

இக்குற்றச்சாட்டு தொடர்பில் உண்மை நிலை அறிய, ஆய்வு விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா. தலைப்பட்ட போதும் ஐ.நா. அதிகாரிகளுக்கான வீசா வழங்குவதை மியன்மாரின் ஆங்சாங் சூகி அரசு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved