ஹஜ் செய்திகள்: புனித மதீனா மாநகரில் ஹஜ் யாத்ரீகர்கள் வருகை அதிகரிப்பு !

Published On Friday, 4 August 2017 | 12:54:00


இந்த வருட ஹஜ் பயணிகளை வரவேற்கவும் அவர்களுக்கான அடிப்படை சேவைகளை வழங்க அனைத்து முன்னேற்பாடுகளுடனும் தயாராகவுள்ள நபி (ஸல்) அவர்களின் பட்டிணம் என பொருள்படும் புனித மதினா மாநகரில் ஹஜ் யாத்ரீகர்களின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த வருட இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 9 சதவிகிதம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமை வரை சுமார் 109,428 ஹஜ் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. இவர்களில் உலகெங்குமிருந்தும் சுமார் 311 விமானங்கள் மூலம் மதினாவிலுள்ள இளவரசர் முஹமது பின் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக வருகை தந்தோர் சுமார் 103,123 பேர். சர்வதேச சாலை போக்குவரத்தை பயன்படுத்தி சுமார் 158 பேருந்துகள் மூலம் வருகை தந்தோர் 6,305 பேர்.

மதினா விமான நிலையத்தில் அல்லாஹ்வின் விருந்தினர்களை வரவேற்கவும் அவர்களுக்கான சேவைகளை விரைவாக வழங்கவும் ஏதுவாக 100 பாஸ்போர்ட் கவுன்டர்களும், 5 தாராள இடவசதியுடைய லவுஞ்சுகளும் உள்ளன. இதுவரை அதிகளவில் இந்தியாவிலிருந்து சுமார் 30,110 ஹஜ் பயணிகளும் இவர்களுக்கு அடுத்த நிலையில் பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேஷியா, ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.

மதினாவில் உள்ள சுமார் 581 ஹோட்டல்கள் மற்றும் வசதியான குடியிருப்புக்களில் சுமார் 353,000 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன என்றாலும் இதுவரை சுமார் 31 சதவிகித படுக்கைகளுக்கான ஹஜ் யாத்ரீகர்களே வருகை தந்துள்ளனர்.

இதுவரை சுமார் 200 ஹஜ் பயணிகள் மஸ்ஜிதுந்நபவி உள்ளேயும், சுமார் 824 பேர் பள்ளிக்கு வெளியேயும் தங்களுடைய தங்குமிடங்களுக்கு திரும்பச் செல்வதற்கான வழியை மறந்து தவித்துள்ளனர், இவர்கள் அனைவரும் பத்திரமாக அவரவர்களின் தங்குமிடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.

600க்கு மேற்பட்ட வயதில் முதிய ஹஜ் யாத்ரீகர்களுக்கு வீல்சேர் வசதிகள் செய்து தரப்பட்டு அவர்கள் மஸ்ஜிதுந் நபவிக்கு சென்று வரத்தேவையான உதவிகளை பெற்றுள்ளனர். சுமார் 4,425 சுகவீனமுற்ற பயணிகளுக்கு மருத்துவ மனைகளிலும் சுகாதார மையங்களிலும் வைத்து தேவையான சிகிச்கைகள் வழங்கப்பட்டன.

அதேவேளை புனித மக்கா நகரில், 185,000 நட்சத்திர விடுதி ஹோட்டல் அறைகளுடன் கூடுதலாக வசதியான பல குடியிருப்புக்களும், எண்ணற்ற வீடுகளும் ஹஜ் யாத்ரீகர்களுக்காக தயார் நிலையில் உள்ளன. இந்த தங்குமிடங்களில் சுமார் 1.6 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்கள் தங்க முடியும். இந்த தங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை மினா அருகிலுள்ள அல் அஸீஸியா பகுதியிலேயே தங்குவர்.

2 புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளபடி, புனித கஃபாவைச் சுற்றிப் போர்த்தப்பட்டுள்ள கிஸ்வா துணி அடுத்த வாரம் சுத்தம் பேணுதலுக்காக சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு சுருட்டி வைக்கப்படும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved