சவூதி கத்தார் முறுகல் - விமானம் மூலம் பயணிக்க இருந்த யாத்திரிகர்கள் நிர்க்கதியில்!

Published On Saturday, 26 August 2017 | 12:37:00

கத்தரிலிருந்து விமானம் மூலம் ஹஜ் செய்யும் பயணிகளுக்கு இதுவரை பயண ஏற்பாட்டு உறுதி செய்யப்படாததால் இந்த ஆண்டு அவர்கள் ஹஜ் செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.
கத்தரைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் சவூதி உள்ளிட்ட மூன்று அரபு நாடுகள் இணைந்து கத்தரின் தரை, வான் மற்றும் கடல் வழிகளை முடக்கியதால், கத்தரிலிருந்து ஹஜ் செய்ய இருந்த புனித யாத்திரிகர்களின் பயணம் கேள்விக்குறியானது.
இதற்கு எதிராக கத்தரின் மனித உரிமை ஆணையம், சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தனிமனித வழிப்பாட்டுச் சுதந்திரத்தைச் சவூதி பறிப்பதாகக் கூறி புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து, சவூதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வதைத் தடுப்பது சர்வதேச தனிமனித வழிபாட்டு உரிமைக்கு எதிரானது என சவூதியின் மீது கடுமையான விமர்சனமும் கண்டனமும் எழுந்தன. 

இந்நிலையில், கத்தரிலிருந்து ஹஜ் செய்யும் பயணிகளுக்கு மட்டும் தரை மற்றும் வான் வழி திறக்கப்படும் என சவூதி அறிவித்தது. சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்ற நிலையில், வான் வழி சவூதி வரும் கத்தர் குடிமக்கள் சவூதியின் ஏர்லைன்ஸில் மட்டுமே வர வேண்டும் எனவும் அவர்களின் பயணச் செலவைச் சவூதி வகிக்கும் எனவும் திடீரென சவூதி அறிவித்தது. ஆனால், ஹஜ்ஜுக்குச் செல்லும் பயணிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கத்தர் ஏர்வேய்ஸ் உட்பட அனைத்து விமானங்களும் ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும் கத்தர் கோரியது. இதற்குச் செவிசாய்க்க மறுத்த சவூதி, தம்முடைய ஏர்லைன்ஸ் விமானங்கள் கத்தர் விமானதளத்தில் இறங்க கத்தர் தடை விதித்துள்ளது எனவும் செய்தி பரப்பியது. அவ்வாறான தடை ஏதும் கத்தர் விதிக்கவில்லை எனவும் அனைத்து விமானங்களும் ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்றே கத்தர் கோரிக்கை வைத்துள்ளது எனவும் கத்தர் உள்துறை அமைச்சகம் அச்செய்தியினை மறுத்தது.
பிரச்சனை இவ்விதம் இழுபறியில் சென்று கொண்டிருக்க, இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக மக்கா நகரம் செல்ல வேண்டிய நாட்கள் நெருக்கமாகி விட்ட நிலையில் இதுவரை கத்தர் ஹஜ் பயணிகளுக்குப் பயணத்துக்கான எந்தவித உறுதியும் தரப்படாததால் இவ்வாண்டு அவர்கள் ஹஜ் செய்வது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
கத்தர் - சவூதி இடையிலான அரசியல் பிரச்சனைக்கு ஆன்மீகத்தைப் பகடைக் காயாகப் பயன்படுத்தும் சவூதியின் அணுகுமுறை மிகப் பெரும் அளவில் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
நேற்றைய வெள்ளிக்கிழமை தொழுகை பிரசங்கத்தின் இடையே, "முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் வகையிலும் அவர்களுக்குக் கிடைக்கும் அருளைக் கெடுக்கும் வகையிலும் யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் இஸ்லாத்தின் முன்னிலையில் தவறிழைப்பவர்களாவர்; மேலும் தம் சொந்த மக்களையும் சொந்த நாட்டையும் ஏமாற்றுபவர்களாவர்" என மக்கா பள்ளிவாசல் இமாம் ஷெய்ஹ் சாலஹ் முஹம்மது அல் தாலிப் நாட்டின் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக கண்டனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(Abdur Rahman) 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved