Tuesday, 25 July 2017

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இருவகையான யுத்தங்கள்! அதிர்ச்சித் தகவல்!

(ஆதில் அலி சப்ரி) இலங்கை இரண்டு பெரும் யுத்தங்களை எதிர்கொண்டுள்ளது. ஒருபுறம், டெங்கு தொற்றால் ஒரு இலட்சத்திற்கதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்க, மறுபுறம் நாடு கடும் வறட்சியையும் எதிர்கொண்டுள்ளது. 

வறட்சியால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 3 இலட்சம் பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் விவசாய, குடிநீர் இன்னோரன்ன தேவைகளுக்காக நீரின்றி தவிக்கின்றனர். 

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், குருணாகலை, புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களே கடுமையான வறட்சியுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டுள்ளன.

வறட்சியால் இம் மாவட்டங்களில் 3 போகங்களாக விவசாய முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளதுடன் விவசாயிகளும் பெரும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்துள்ளனர். ஒரு வருடமும் 5 மாதங்களாக போதிய மழை வீழ்ச்சி கிடைக்காத காரணத்தினால் விவசாய முயற்சிகளுக்காக நீரைப் பெற்றுக்கொள்ளும் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் பெரிதும் குறைவடைந்துள்ளதாகவும், பெரும் போகத்திற்கு நீர் வழங்க முடியாத நிலை தொடர்வதாகவும் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் ஜானகீ மீகஸ்வத்த தெரிவித்துள்ளார்.

 வறட்சியால் விவசாயிகளும், விவசாயத்துடன் தொடர்புடையவர்களுமே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். விவசாயத்திற்கு முதலிட்டவர்கள் கடன் மிகைத்து தற்கொலை வரை சென்ற சம்பவங்களும் நாம் கேள்வியுற்றுள்ளோம். 

யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நீரின்றி விலங்குகள் இறந்து மடிந்துபோயுள்ளதை ஊடகங்களில் கண்டோம். கொழும்பில் அல்லது நீர் வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமானவர்களுக்கு வறட்சி யின் அகோரம் புரியாமல் இருக்கலாம். 

மேற்படி 12 மாவட்டங்களில் ஏதாவதொன்றுக்கு விஜயம் செய்து, ஒருநாள் தங்கியிருந்தால் அம்மக்களின் நிலையை கண்டுகொள்ளலாம். இலங்கை வருடா வருடம் ஏதாவதோர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து வருகின்றது. அது, வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கையனர்த்தமாகவோ, சாலாவை, மீதொட்டமுல்லை போன்ற அனர்த்தங்களாகவோ இருக்கலாம். நாட்டு மக்கள் அனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளைச் செய்ய முன்வருவதை அவதானிக்கின்றோம். 

வறட்சியை ஓர் அனர்த்தமாக கண்டுகொள்ளாத நிலையே தொடர்கின்றது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் குடிநீர்த் தேவைக்கு நாளொன்றிற்கு 2-4 லீட்டர் போன்ற சிறிதளவு நீரே விநியோகிக்கப்படுகின்றது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாட உணவுத்தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாது கிழங்கு வகைகளையே உணவாக உட்கொண்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்ய அரசாங்கமும் தன்னார்வ தொண்டர் அமைப்புகளும் உடன் முன்வர வேண்டும். 

குளங்கள் பாழடைந்து போயுள்ளதால் தேவைக் கேற்ற நீரை சேமித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் குளங்களை புனர்நிர்மாணம் செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீர் விநியோகங்களை மேற்கொள்ள போதிய பவ்சர் வசதிகளை வழங்க வேண்டும்.

 தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் பொது மக்களும் வெள்ளத்தின்போது மேற்கொள்ளும் மனிதாபிமான உதவிகள் போன்றே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் மனிதாபிமான உதவிகளைத் தொடர வேண்டும். வெள்ள அனர்த்தத்திற்கு உதவுவது போன்று வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவுவோம்.

Author: verified_user

0 comments: