Saturday, 29 July 2017

அப்துல்கலாமின் நினைவு நாளன்று பயணிகளை இலவசமாக ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர்!

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-வது நினைவு நாளான நேற்று(27-09-2017)  சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன் (29) பயணிகளை இலவசமாக ஏற்றி சென்றார்.

வாடகை ஆட்டோவை ஓட்டி வரும் இவர் கலாம் மறைவை நினைவு கூர்ந்து ஒருநாள் முழுவதும் இலவசமாக பயணிகளை ஏற்றி செல்வது உண்டு.

இந்த வருடமும் காலை 7 மணி முதல் தனது இலவச சவாரி பயணத்தை தொடங்கினார். நந்தனம் தனியார் மருத்துவமனை அருகில் உள்ள ஸ்டேண்ட்டில் இருந்து முதல் சவாரியாக பாண்டிபஜார், அதனை தொடர்ந்து கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணிகளை ஏற்றி சென்றார்.

‘‘நான் விட்டு சென்ற பணியை தொடருங்கள் மாணவ செல்வங்களே’’ என்ற அப்துல்கலாமின் வரிகளை சுமந்து கொண்டு கலையரசன் சென்றார்.

ஆட்டோவில் இலவச பயணம் குறித்த தகவல் எழுதி இருந்த போதிலும் அதனை பார்க்காதவர்கள் வழக்கம் போல கட்டணத்தை கேட்டு உறுதி செய்ய முயன்றபோது இன்று ஒரு நாள் மட்டும் பயணிகளை இலவசமாக அழைத்து செல்வதாக கூறி இன்முகத்துடன் ஏற்றிச் சென்றார்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கலையரசன் கூறியதாவது:-

அப்துல்கலாம் ஒரு நல்ல மனிதர். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர், தன்னலமற்றவர். அவர் மறைந்தது முதல் அவரது நினைவு நாளில் இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்கிறேன். ஆட்டோ மூலம் தினமும் ரூ.700 சம்பாதிப்பேன். இதில் ரூ.250 ஆட்டோ உரிமையாளருக்கு வாடகையாக கொடுக்க வேண்டும். பெட்ரோலுக்கு ரூ.200 போக ரூ.250 கிடைக்கும். இதை வைத்துதான் குடும்பம் நடத்துகிறேன். அவருக்காக ஒருநாள் கட்டணம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இந்த சேவையை செய்வேன்.

என்னுடைய சேவையை நினைத்து என் ஆட்டோ உரிமையாளர் மணிகண்டன் இன்று வாடகை வேண்டாம் என கூறி விட்டார். நல்ல மனிதர்களும், நல்ல உள்ளங்களும் இன்னும் நாட்டில் இருப்பதால் தான் நற்பண்புகள், மனித நேயம் எதாவது ஒரு மூலையில் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது என்றார்.

Author: verified_user

0 comments: