Tuesday, 18 July 2017

மத்திய கிழக்கு வாழ்க்கையின் மற்றுமொரு முகம் இது.., அவசியம் படியுங்கள்.

மத்திய கிழக்கிற்கு தொழிலுக்கு வர விரும்புகின்றவர்களுக்கு நான் அடிக்கடி செய்யும் உபதேசம் ஒன்றே ஒன்றுதான் அது, நன்றாக படியுங்கள் ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவத்தை பெற்றுக்கொண்டு மத்தியகிழக்கிற்கு வாருங்கள் அதிகாரம் செலுத்தும் உரிமை உங்களிடம் இருக்கும்.
மத்தியகிழக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே பலபேர் ஒழுங்காக படிப்பதில்லை படிக்காவிட்டால் என்ன வெளிநாடு போய் சம்பாதித்துக்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் படிப்புக்கு முழுக்கு போட்டு விடுகிறார்கள், படிக்காமல் வெளிநாடு போய் சம்பாதிக்கலாம் என்கின்ற எண்ணத்தில் நீங்கள் விமானமேறினால் கடைசியில் இதுபோன்ற நிலைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதை மறவாதீர்கள்.
இவர்களை போல லட்சோப லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவருமே இதை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல, 10 விகிதத்தினர் விரும்பி வந்திருந்தாலும் மிகுதி 90 விகிதத்தினர் முகவர் நிலையங்களினால் ஏமாற்றப்பட்டே இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அதிலும் 10 விகிதத்தினர் திரும்பி போய் விடுவார்கள் ஏனைய 80 விகிதத்தினரும் வாங்கி வந்த கடனுக்காக, கல்யாணம் முடிக்க காத்திருக்கும் தங்கைக்காக, கட்டி பாதியில் விடப்பட்ட வீட்டுக்காக, இருமிக்கொண்டே வீட்டுக்குள் படுத்திருக்கும் தாய் தந்தைக்காக, பள்ளிப்படிப்பை தலையில் சுமந்திருக்கும் தம்பி தங்ககைகளுக்காக, தனக்கு வரப்போகும் மனைவியின் எதிர்பார்ப்புக்காக என தங்களின் வாழ்க்கையை இதற்குள் தொலைத்து விட்டவர்கள்.
இவர்கள் இங்கே இப்படி உறங்குவதனால்தான் எங்கோ ஒருவன் பஞ்சு மெத்தையில் சுகமாக உறங்க முடிகின்றது. இவர்கள் நாட்டுக்கு செல்லும்போதுதான் உறவுகள் இவர்களுடன் சண்டையிடுவது எனக்கு அது தரவில்லை, இது தரவில்லை என்று, நண்பர்கள் கோபித்துக்கொள்வது எனக்கொன்றும் நீ கொண்டுவந்து தரவில்லை என்று. சிந்திப்போம், பட்டுமெத்தையில் பஞ்சு தலையணையில் படுத்து எழும்பி சம்பாதிப்பவர்கள் வெறும் பத்து விகிதத்தினர்தான் ஏனைய அனைவரும் கல்லுக்கும், மண்ணுக்கும், புழுதிக்கும், வெயிலுக்கும், பனிக்கும், தமது வாழ்க்கையை அடகுவைத்து உழைப்பவர்கள் அவர்களின் இரத்தத்தை குடிக்க வேண்டாம்.
மறுமையில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் ஒவ்வொரு துளிக்கும்.
(Razana Manaf)

Author: verified_user

0 comments: