Sunday, 2 July 2017

இஸ்ரேலின் பாதுகாப்புடன் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மத் பின் சல்மான்!

(லத்தீப் பாரூக்) அமெரிக்காவும்; இஸ்ரேலும் சவூதி அரேபியாவின் ஆளும் குடும்பத்துக்கான தமது அடுத்த தெரிவான இளவரசர் முஹம்மத் பின் சல்மானை முடிக்குரிய இளவரசர் பதவியில் அமர்த்தியுள்ளன. தற்போதைய மன்னர் சல்மானின் வயது முதிர்ச்சி காரணமாக அவசர அவசரமாக ஆளும் குடும்பத்துக்குள் இந்த ஒட்டு மொத்த அதிகார மாற்றம் இடம் பெற்றுள்ளது. மன்னர் சல்மான் பதவிக்கு வந்தது முதல் சவூதி அரேபிய ஆட்சி மாளிகைக்குள் இடம்பெற்று வந்த நாசகார சதித்திட்டங்களின் இறுதிக் கட்டமாகவே இந்த அதிகார மாற்றம் இடம் பெற்றுள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது.

இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடனேயே முழு முஸ்லிம் உலகையும் அதிர்ச்சியில் உறையச் செய்யும் வகையில் இஸ்ரேல் அதன் 18 யுத்த விமானங்களை அவசரமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. கு161, கு15ஊனு, கு16ஊனு என்பன இதில் அடங்கும். இரண்டு கல்ப்ஸ்ட்ரீம் விமானங்கள், யுத்த தாங்கிவகையைச் சார்ந்த இரண்டு விமானங்கள், ஊ130 ரகத்தைச் சார்ந்த இரண்டு விமானங்கள் மற்றும்; விஷேட இலத்திரனியல் யுத்த தந்திரோபாய விமானங்கள் என்பன உள்ளடங்களாகவே இந்த 18 விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. புதிய முடிக்குரிய இளவரசர் ஸல்மானின் வேண்டுகோளுக்கு இணங்கவே இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடிக்குரிய இளவரசராக இதுவரை பதவியில் இருந்த இளவரசர் நயாப் பின் அப்துல் அஸீஸ் சல்மான் குடும்பத்துக்கு எதிராக இராணுவ சதிப் புரட்சிகளில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த அவசர உதவி கோரப்பட்டுள்ளது.

புதிய முடிக்குரிய இளவரசர் தனது சொந்த உறவுகளை விட இஸ்ரேலை அதிகம் நம்புகின்றார் என்பதையே இது புலப்படுத்துகின்றது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ள எதிரியான இஸ்ரேல் சவூதி ஆட்சி பீடத்தின் மகுடத்துக்கு பாதகாப்பு அளிக்கின்றது. இதுதான் இஸ்லாமிய மற்றும் முஸ்லிம்களது வரலாற்றில் மிக கேவலமானதோர் நிலைமையாகும். ஆனால் உலகில் இருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ள யதார்த்த நிலையும் இதுதான்.

எவ்வாறாயினும் சவூதி இஸ்ரேல் உறவுகள் புதியதோ அல்லது உலகுக்கு தெரியாத ஒன்றோ அல்ல. சவூதி அரச குடும்பத்தினர் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கூலிப்படையினரைத்தான் தமது மெய்ப் பாதுகாவலர்களாக வைத்துள்ளனர். தனிப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் கூலிப்படையினர் தான் சவூதி இளவரசர்களின் பாகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதை தவிர்த்துக் கொள்வதற்காக தமது முகங்களை மறைத்தவர்களாகவும் ஏனைய வழிகளில் தங்களை அடையாளம் தெரியாமல் மறைத்தவர்களாகவுமே பணிபுரிகின்றனர்.

கடந்த பல வருடங்களாக புனித ஹஜ் கடமைகளின் போதும் மக்கா நகர் உட்பட சவூதியின் பாதுகாப்பு இஸ்ரேலிய நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கம் வலுவடைந்துள்ளது. 

ஜெரூஸலத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலின் பிரதான இமாம் ஷேக் இக்ரிமா சஆத் சப்ரி இதை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். சவூதியின் அரசியல் நிலைமைகள் பற்றி மிக விரிவாக ஆராயும் பத்தி எழுத்தாளர் டேவிட் ஹேர்ஸ்ட் 2017 ஏப்பிரலில் எழுதிய ஒரு கட்டுரையில் சவூதி அரேபிய இளவரசருக்கு மன்னராக வருவதற்கு மூன்று வகையான அதிகாரங்கள் தேவைப்படுகின்றன. 

முக்கியத்தவத்தின் அடிப்படையிலான ஒழுங்கு முறைப்படி அமெரிக்க ஆதரவு, அரச குடும்ப ஆதரவு, சவூதி மக்களின் ஆதரவு என்பனவே அவை. இதில் மூன்றாவது விடயம் மிகவும் பிந்திய நிலையிலான ஒரு கணிப்பீட்டின் அடிப்படையிலேயே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. 1945 பெப்ரவரி 14 முதல் சவூதி அரேபியாவின் மன்னராகப் பதவிக்கு வந்த எல்லோரது நிலையும் இதுதான். எகிப்தின் நீரிணை ஒன்றில் அமெரிக்க நாசகாரிக் கப்பல் ஒன்றில் இருந்தவாறு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பிராங்லின் டி ரூஸ்வெல்ட் சவூதி அரேபியாவின் ஸ்தாபக மன்னர் அப்துல் அஸீஸை சந்தித்தது அன்றைய தினத்தில்தான்.

தற்போது 31 வயது மட்டுமே நிரம்பிய அரசியல் முன் அனுபவங்கள் எதுவும் அற்ற அஜாக்கிரதை போக்குடைய முஹம்மத் பின் சல்மான் சவூதியின் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்றவர்தான் அமெரிக்காவின் இன்றைய ஜனாதிபதி டிரம்ப்பும். அதேபோல் டிரம்ப் இன்று முடிக்குரிய இளவரசரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 81 வயதான தற்போதைய மன்னர் சல்மானின் உடல் நிலையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் அவரது மகன் மன்னராகும் நாற்கள் வெகு தூரத்தில் இல்லை என்றே கருதத் தோன்றுகின்றது.

தற்போது ஜெர்மனியில் வசிக்கும் சவூதியின் இன்னொரு இளவரசர்களில் ஒருவரான காலித் பின் பர்ஹான் அல் சவூத் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் இளவரசர் முஹம்மத் பின் சல்மான தனது தந்தையின் மரணத்துக்கு முன்னர் மன்னராவதற்கு அமெரிக்கா சில நபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். http://thenewkhalij.org/ என்ற இணையத் தளம் இதை வெளியிட்டுள்ளது.

'அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முழுக்க முழுக்க விசுவாசமாக செயற்பட வேண்டும். அவர்கள் என்ன சொன்னாலும் அதை செய்ய வேண்டும்' என்பது இந்த நிபந்தனைகளுள் பிரதானமானது. இது தவிர காஸாவில் வாழும் சகல மக்களையும் சினாய் பாலைவனத்தின் வட பகுதியில் குடியமர்த்தி அந்தப் பகுதியை அவர்களுக்கான மாற்றுத் தாயகமாக பிரகடனம் செய்ய வழிவகுத்தல், சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் அதற்குத் தேவையான நிதி உதவிகள் அனைத்தையும் வழங்கல், ஹமாஸை முற்று முழதாக அழித்தல் அவர்களுக்கு உதவுபவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களையும் தீர்த்துக்கட்டல், எகிப்திடமிருந்து சனாபிர் தீவை விடுவித்துக் கொடுத்தல் என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் கடைசி நிபந்தனையானது அகபா குடா பிராந்தியத்தை சர்வதேச நீரிணையாக்கும். தற்போது அது எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீரிணை பிரதேசமாக உள்ளது. இஸ்ரேலின் கப்பல்கள் எய்லாத் துறைமுகத்தை சர்வ சாதாரணமாகவும் சுதந்திரமாகவும் பயன்படுத்த இது வழியமைக்கும். சுயஸ் கால்வாய்க்கு சமாந்தரமான ஒரு நீரிணைத் திட்டத்தை 500 மில்லியன் அமெரிக்க டொலரில் மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அதை இது மிகவும் இலகுவாக்கும் என்று ஜெர்மனியில் வசிக்கும் காலித் பின் பர்ஹான் அல் சவூத் தெரிவித்துள்ளார்.

சவூதி பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் பின் சல்மான் யெமனில் உள்ள ஈரான் ஆதரவாளர்களான ஹெளத்தி இனத்தவர்கள் மீது அர்த்மற்ற தாக்குதல்களை தொடுத்தார். இதன் மூலம் பால் வேறுபாடு வயது வேறுபாடு என்பன இன்றி 16000த்துக்கும் அதிகமான யெமன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நகரங்கள், கிராமங்கள், வீடுகள், கட்டிடங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள் என்பன தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. யெமன் மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். தனது படைகள் யெமனில் மக்களை கொன்று குவிக்கையில் மாலைதீவில் உல்லாசமாக பொழுதை கழித்தவர் தான் இந்த இளவரசர்.

தற்போதைய முடிக்குரிய சவூதி இளவரசரின் மற்றொரு முக்கிய சகாவாகவும் நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முடிக்குரிய இளவரசராக இருக்கும் முஹம்மத் பின் செயிட். இஸ்லாத்தை வெறுத்து சியோனிஸத்தை ஆதரிக்கும் வெற்கக் கேடான ஒருவர் தான் இவர். இவரது ஆலோசனையின் கீழ் தான் முஹம்மத் பின் சல்மான் இஸ்ரேலுடனான உறவுகளை அதிகரித்து சமய அதிகாரத்துக்கான தடைகளை ஏற்படுத்தினார்.

அமெரிக்காவுடன் சவூதி அரேபியா செய்து கொண்ட 110 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத கொடுக்கல் வாங்கலுக்கு பின்னால் இருந்தவர் முஹம்மத் பின் சல்மான் தான். தனது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இந்த உடன்படிக்கையை அவர் செய்துள்ளார். சவூதி சனத்தொகையில் 15 வீதமானவர்கள் வேலையில்லா திண்டாட்டத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். சல்மான் யதார்த்தத்தை விட்டு நீண்ட தூரம் விலகி நிற்கும் ஒருவர் என்பதை இது தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

இங்கே மேலோங்கும் மிகவும் அச்சத்தக்குரிய கேள்வி என்னவென்றால் பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் இளவரசர் சல்மான் அதே பாணியில் தனது படைகளை கட்டாரை நோக்கி ஏவிவிட்டால் என்ன நடக்கும்? அது முழு வளைகுடா பிராந்தியத்தையும் மீண்டும் ஒரு கொலைகளமாக மாற்றிவிடும். இதன் முழு பலனையும் இஸ்ரேலும் அதன் மேற்குலக ஆதரவாளர்களும் தான் அனுபவிப்பர். 1990 ஜுலையில் சத்தாம் ஹுஸைனை ஏவிவட்டு குவைத்தை ஆக்கிரமித்தது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தக் கூடும்.

இத்தகைய ஒரு கேள்வி எழுவதற்கு நியாயமான ஒரு காரணமும் உள்ளது. அதுதான் கட்டார் மீதான தடைகளை நீக்க சவூதி அரேபியா விதித்துள்ள நிபந்தனைகளும் அதற்கான பத்து நாள் காலக்கெடுவும். இந்த நிபந்தனைகளுள் பல ஈரானை முடக்குவதற்கு இஸ்ரேல் மீண்டும் மீண்டும் விதித்து வரும் நிபந்தனைகளாகும் என்பதும் இங்கே கவனிக்கத்ததக்கது.

அந்த 13 நிபந்தனைகளாவன:
1. ஈரானுடனான உறவுகளைத் துண்டிப்பது : ஈரானில் உள்ள கட்டாரின் ராஜதந்திர நிலையத்தை மூடுவது. ஈரானின் புரட்சிக் காவல் படை உறுப்பினர்களை வெளியேற்றுவது. ஈரானுடன் கூட்டு இராணுவ ஒப்பந்தங்கள் இருந்தால் அவற்றை ரத்துச் செய்வது. அமெரிக்க மற்றும் சர்வதேச தடைகளுக்கு உற்பட்ட விதத்தில் ஈரானுடன் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக உறவுகளை மட்டும் கொண்டிருப்பது.
2. பயங்கரவாத அமைப்புக்களுடனான எல்லா உறவுகளையும் துண்டிப்பது : குறிப்பாக இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம், ஐளு, அல்குவைதா, லெபனானின் ஹிஸ்புல்லாஹ் ஆகிய அமைப்புக்களுடன். இவற்றை பயங்கரவாத அமைப்புக்கள் என உத்தியோகப்பூர்வமாக பிரகடனம் செய்தல். (குறிப்பு: இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் என்பன இஸ்லாமிய நெறிகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள். இஸ்ரேலை போலன்றி அமைதியான முறையில் தமது உரிமைகளுக்காக இவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இஸ்ரேலோ பலஸ்தீன மக்களுக்கு எதிராக பாரிய அளவிலான 60க்கும் மேற்பட்ட இனப் படுகொலைகளைப் புரிந்துள்ளது)
3. அல் ஜஸீரா மற்றும் அதனோடு தொடர்புடைய இணை நிலையங்கள் அனைத்தையும் இழுத்து மூடல்.
4. கட்டார் நிதி உதவி வழங்கும் செய்தி நிலையங்கள் அனைத்தையும் இழுத்து மூடல். நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வழங்கும் எல்லா நிலையங்களும் இதில் அடங்கும். அரபி21, ராஸ்த், அல் அராபி, அல்ஜதீத், மிட்ல் ஈஸ்ட் ஐ என்பன உள்ளடங்களாக
5. கட்டாரில் நிலை கொண்டுள்ள துருக்கி இராணுவத்தை உடனடியாக வெளியேற்றல். கட்டாருக்குள் துருக்கி இராணுவத்துடனான பயிற்சிகள் ஒத்துழைப்புக்கள் தொடர்பான உடன்பாடுகள் எதுவும் இருப்பின் உடனடியாக அவற்றை ரத்துச் செய்தல்.
6. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, பஹ்ரேன், அமெரிக்கா என்பன உட்பட அவற்றின் நேச நாடுகளால் பயங்கரவாத அமைப்புக்கள் என பிரகடனம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் குழுக்கள் மற்றும் அமைப்புக்களுக்கான சகல விதமான உதவிகளையும் உடனடியாக நிறுத்தல்.
7. பயங்கரவாத தொடர்பு நபர்களை கையளித்தல் சவூதி அரேபியா, பஹ்ரேன் ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட ஏனைய நாடுகளால் வேண்டப்படும் பயங்கரவாத நபர்களை அவர்களோடு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கையளித்தல். அவர்களின் சொத்துக்களை முடக்குதல், அவர்களது வதிவிடங்கள், இயக்கங்கள், மற்றும் நிதி தொடர்பான தகவல்கள் இருப்பின் அவை எல்லாவற்றையும் கையளித்தல்.
8. இறைமை மிக்க நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளல்: சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தால் வேண்டப்படும் நபர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நிறுத்திக் கொள்ளல். ஏற்கனவே அவ்வாறு வழங்கப்படடுள்ள குடியுரிமைகளை ரத்துச் செய்தல்.
9. சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் அரசியல் எதிர் குழுக்களுடனான தொடர்புகளை துண்டித்தல். இவற்றுடன் ஏற்கனவே இருந்த தொடர்புகள் பற்றிய கட்டாரில் இருக்கும் எல்லா ஆவணங்களையும் கையளித்தல்.
10. அண்மைக் காலத்தில் கட்டாரின் அரசியல் கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள், சொத்து இழப்புக்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பாக நட்ட ஈடுகளை வழங்கல். இந்த இழப்பீட்டு தொகை கட்டாருடன் இணைந்து தீர்மானிக்கப்படும்.
11. இந்த நிபந்தனைகளுக்கு இணங்கிய பின் முதலாவது ஆண்டில் தொடர்ச்சியாக மாதாந்த கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ளல். இரண்டாவது ஆண்டில் இந்த மீளாய்வு காலாண்டுக்கு ஒரு முறை இடம்பெறும். அதன் பிறகு பத்து ஆண்டுகளுக்கு கட்டாரின் நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வு இடம்பெறும்.
12. இராணுவ அரசியல் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக கட்டார் வளைகுடா பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் இணங்கிப் போதல். பொருளாதார விடயங்களைப் பொறுத்தமட்டில் 2014ம் ஆண்டு சவூதி அரேபியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் நடந்து கொள்ளல்.
13. இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்ட பத்து தினங்களுக்குள் அவற்றை ஏற்றுக் கொள்ளல். இல்லையேல் இது வலுவிழந்து விடும்.
இவை நியாயமற்ற நிபந்தனைகள் என்பதால் கட்டார் எற்கனவே இவற்றை நிராகரித்துள்ளது. பிரச்சினை நாளுக்கு நாள் ஆழமாகிக் கொண்டே செல்கின்றது. இது ஒரு ஆயுத மோதலாக உருவெடுக்கலாம் என்ற அச்சமும் மேலோங்கி உள்ளது. 
​(முற்றும்)

Author: verified_user

0 comments: