Monday, 3 July 2017

150 வருடங்களாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி? இது குறித்து சிறப்பு தொகுப்பு...!

பாரசீக வளைகுடாவின் 'சீரழிந்த குழந்தை' என்று கத்தாரை சிலர் குறிப்பிடுகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி புரியும் அல்-தானி குடும்பம், 'அண்டை நாட்டினருக்கு தொல்லை கொடுக்கும் குடும்பம்' என்றும் சிலர் சொல்கிறார்கள்.

கத்தார் தனது அண்டை நாடுகளுடன் ஒரு ராஜாங்க ரீதியான சிக்கலை தற்போது எதிர்கொண்டுள்ளது. செளதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகள், கத்தார் மீது சில புகார்களை எழுப்பியதோடு, ராஜாங்க உறவுகளையும் துண்டித்துவிட்டன. தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக கத்தார் மீது அண்டை நாடுகள் வைக்கும் குற்றச்சாட்டை அந்த நாடு மறுத்திருக்கிறது.

ஆனால், சிறிய நாடான கத்தாரில் தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தாலும், குடிமக்களின் மனித உரிமைகள் மிகவும் மோசமாக இருப்பதான குற்றச்சாட்டுகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அல்-தானி பரம்பரையினரின் ஆட்சியின்கீழ் கத்தார் ஒரு தனிநாடாக 1850 முதல்தான் இயங்கத் தொடங்கியது. அப்போதிருந்து அல்-தானி வம்சத்தினரே கத்தாரின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றனர். கத்தார் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக செளதி அரேபியா, எகிப்து மற்றும் பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளன.

அல்-தானி பரம்பரை

லண்டனில், சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் இன்ஸ்டிட்யூட்டின், மத்திய கிழக்கு நாடுகளுக்கான நிபுணர் பீட்டர் சாலிஸ்பரி கூறுகிறார், "ஒரு குடும்பம், சிறிய பகுதியை ஆட்சி செய்து வந்தது. அதற்கென பிரத்யேகமான எந்தவித சிறப்பம்சமும் கிடையாது. நீண்டகாலமாக செளதி அரேபியாவின் ஒரு பிரதேசமாகவே கத்தார் கருதப்பட்டாலும், காலப்போக்கில் பெரிய அளவிலான பகுதியில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றது.

1980 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் கத்தார் அரசர் கலீஃபா பின் ஹமாத் அல்-தானி மற்றும் அரசப் பதவிகளில் இருக்கும் அல்-தானி பரம்பரையின் பிற உறுப்பினர்கள், கத்தார், இனி பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடவேண்டாம் என்று தீர்மானித்தார்கள். கத்தாரின் உள்நாட்டு அமைதி பற்றி அல்-தானி குடும்பத்தினர் அதிக அக்கறை கொண்டிருந்தனர்.

ஆனால், 1995 ஆண்டு நிலைமைகள் மாறின. இளவரசர் ஹமாத் பின் கலிஃபா அல்-தானி, அவரது தந்தை நாட்டில் இல்லாத சமயத்தில், ரத்தச் சேதம் ஏற்படுத்தாமல் ஆட்சியை கவிழ்த்து சிம்மாசனத்தை கைப்பற்றினார். ஷேக் ஹமாத் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஷேக் ஹமான் பின் ஜாசிம் அல் தானி, கத்தாரை ஒரு பிராந்திய வல்லரசு மற்றும் சர்வதேச மன்றங்கள் கத்தாரை முன்னிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்

செளதி அரேயியாவுடன் உறவு

இளவரசர் ஹமத் பின் கலிஃபா அல்-தானி ஆட்சியைக் கைப்பற்றியபோது, அவரது தந்தை அமீர் கலிஃபா பின் ஹமாத் அல்-தானி சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த சம்பவம், சர்வதேச அரசியலில், அல்-தானி குடும்பத்தின் மீதான கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. "அல்-தானி குடும்பம் கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக மாறியதால், இவர்களை சிலர் சிக்கல் மிகுந்தவர்களாக சித்தரிக்கின்றனர்."

"பழங்குடியின பரம்பரையை சேர்ந்த ஒரு குடும்பம், செளதி அரேபியாவுடன் உறவுகொண்டது. சாதாரண நிலையில் இருந்த அந்த உறவினர்கள், சர்வதேச அரங்கங்களில் உயரிய இடங்களில் அமரவைக்கப்பட்டனர், இதனால் சந்தேகம் அதிகரித்தது" என்று பீட்டர் சாலிஸ்பரி கூறுகிறார்.

ஹமத் பின் கலிபா அல்-தானியின் தந்தை அமீர் கலிபா பின் ஹமத் அல்-தானி, செளதி அரேபியாவுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தார். ஆனால் இளவரசரின் அதிகாரத்தின்கீழ் கத்தார் வந்த பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அவரது கொள்கைகளால், கத்தாருடன் அண்டை நாடுகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கத்தார் விவகாரத்தில் நடைபெற்ற விசயங்களை, அண்டைநாடுகள் மோசமான உதாரணமாக பார்த்தன.

எல்.என்.ஜி (திரவநிலை இயற்கை எரிவாயு) ஏற்றுமதி

ஏனெனில் கத்தாரின் அண்டை நாடுகளிலும் முடியாட்சியே நிலவுகிறது. ஷேக் ஹமாத், அரியணை ஏறியதும் இயற்கை எரிவாயு வயல்களை துரிதகதியில் மேம்படுத்தினார். 1996-ல் கத்தார், முதல்முறையாக எல்.என்.ஜி ஏற்றுமதியை தொடங்கியது.

அதே ஆண்டு, ஷேக் ஹமாதின் அரசை கவிழ்க்க முயன்றதாக செளதி அரேபியா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷேக் கலீஃபாவை மீண்டும் அரியணையில் ஏற்ற செளதி அரேபியா முயற்சி செய்ததாக கூறப்பட்டது. ஏற்றுமதி வருவாய் மூலம் கத்தார் விரைவிலேயே பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடாக முன்னேறியது.

இன்றும்கூட திரவநிலை இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கத்தாரே முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமல்ல, செளதி அரேபியாவிற்கு, தனது பிராந்தியத்தில் மிகப்பெரிய எதிரியாக விளங்கும் இரானுடன் இணைந்து, கத்தார் இயற்கை எரிவாயு வயல்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

கத்தாரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதை அண்டை நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஷேக் கலீஃபாவின் ஆட்சி மிகவும் வித்தியாசமானது, அவர் அமைதியாக ஆட்சிபுரிந்தார். ஆனால் ஷேக் ஹமாத், அதிரடியாக செயல்பட்டார். இளம் ரத்தம், திறமையானவர், சுதந்திரமானவர். கூடவே மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் விரும்பினார்."

தமீம் பின் ஹமாத் அல்-தானி

ஷேக் ஹமாத் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஷேக் ஹமான் பின் ஜாசிம் அல்-தானியும், பிராந்திய வல்லரசாக சர்வதேச அரங்கில் கத்தாரை முன்னிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஷேக் ஹமாத், தனது ஆட்சியில் கத்தாரின் சர்வதேச கொள்கையை விரிவாக்கியதுடன், அல்-ஜஸீரா என்று ஒரு செய்தி சேனலையும் தொடங்கினார். அது, அரபு உலகின் ஒரு முக்கிய குரலாக வெளிப்பட்டது. கத்தார், பெரும்பாலான உலக நாடுகளின் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் உள்ளது.

2013 இல், அமீர் அரியணையை விட்டு விலகி, தனது நான்காவது மகன் தமீம் பின் ஹமாத் அல்-தானிக்கு முடிசூட்ட முடிவெடுத்தார். அப்போது, தமீம் பின் ஹமாத்துக்கு 33 வயது. புதிய அரசரின் அணுகுமுறை சமநிலையில் இருக்கும் என்று எதிர்பார்த்த அண்டை நாடுகளின் எண்ணம் பொய்த்துப்போனது.

எகிப்தில் முகமது மோர்ஸியின் ஆட்சி மாறிய சில மாதங்களுக்கு பிறகு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் தோஹாவில் மீண்டும் ஒன்றிணைய கத்தார் அரசர் அனுமதி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு

அரபு உலகில் சுன்னி தீவிரவாதக் குழுக்கள் வளர்ந்துவந்த நிலையில், பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா, சிரியா, செளதி அரேபியா ஆகிய நாடுகள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு தடைவிதித்தன. இதுதொடர்பாக, 2014 ஆம் ஆண்டில் செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை தோஹாவில் இருந்து தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.

தற்போது மீண்டும் அதே நிலைமை திரும்பியிருக்கிறது. அந்த சமயத்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்களை துருக்கிக்கு அனுப்ப கத்தார் ஒப்புக்கொண்டதால் சர்ச்சை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், கத்தார் உலகின் பல நாடுகளின் தனது செல்வத்தை முதலீடு செய்யத் தொடங்கிவிட்ட்து.

அல்-தானி குடும்பத்தினர் பிரிட்டனில் மட்டும் 50 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆடம்பரமான, வானளாவிய உயரம் கொண்ட கட்டடங்கள், வணிக வளாகங்கள் முதல் ஒலிம்பிக் கிராமங்கள் வரை கத்தாரின் பரந்த செல்வம் உலகம் முழுவதும் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.( BBC TAMIL)

Author: verified_user

0 comments: