Thursday, 18 May 2017

ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்: 110 மில்லியன் டொலர் அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு புற்றுநோய் வந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 110 மில்லியன் டொலர் அபராத தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகளவில் ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனம் பிரபலமாக திகழ்ந்து வருகிறது
இந்நிறுவனம், தோல் பராமரிப்பான பொருட்கள், முகப்பவுடர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார பொருட்கள் என பலவற்றை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் முகப்பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு கருப்பை புற்றுநோய் வந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த லோயிஸ் ஸ்லெம்ப் (62) என்னும் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடல் நலத்திற்கு கேடு விளைவித்ததற்கு 5.4 மில்லியன் டொலரையும், அபராத தொகையாக 105 மில்லியன் டொலரையும் அந்நிறுவனம், லோயிஸ்க்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையில், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து கூறிய லோயிஸ், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான முகப்பவுடரும், குளித்த பிறகு பயன்படுத்தும் பவுடரையும் தான் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்
பின்னர் கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு அது நுரையீரலுக்கும் பரவியதையடுத்து தற்போது அவர் ரசாயன சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், குழந்தைகளுக்கான ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடர் பாதுகாப்பானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

Author: verified_user

0 comments: