Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

நெஞ்சை கிழிக்கும் சம்பவம்! மனிதாபிமானம் உள்ளவர்களுக்கு மட்டும்!

Published On Wednesday, 11 January 2017 | 17:34:00

நகரத்து வீதியில் ஒரு கார் சென்றுகொண்டு இருக்கிறது….

உள்ளே ஒரு கணவன் மனைவி, ஐந்து வயது மகன், வயதான அப்பா! நான்குபேரும் பயணிக்கிறார்கள்.

கணவன் காரை ஓட்ட, மனைவி அருகில் உட்கார்ந்து இருக்க, குழந்தை பின் சீட்டில் தாத்தாவோடு விளையாடிக் கொண்டு இருக்கிறான்!

கார் ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிற்க அவன் இறங்கி தந்தையிடம் இருந்த மருந்துசீட்டை வாங்க,

தந்தை: சும்மா ஒரு நாலு நாளைக்கு வாங்கிக்கப்பா போதும், டாக்டருங்க அப்படிதான் எழுதி கொடுப்பாங்க….

மகன்: நீங்க சும்மாருங்கப்பா. டாக்டர் சொன்ன மாதிரி ஒரு மாசத்துக்கு வாங்கிக்கலாம் எல்லா மருந்தும். சரியா ஒரு மாசம் சாப்டிங்கன்னா எல்லாம் சரியாயிடும்…. என்றபடி மருந்துசீட்டை வாங்கிச்சென்று எல்லா மருந்துகளையும் வாங்கி வந்தார்!

குழந்தை தன் அப்பாவின் பாசத்தை கவனித்துக் கொண்டு இருந்தான்!

அடுத்ததாக கார் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நின்றது.

மகன், ”என்னென்ன பழங்கள் புடிக்கும் அப்பா?” என்று தந்தையிடம் கேட்க,

”எதாவது கால்கிலோ வாங்கிட்டு வாப்பா… போதும்! எதுக்கு தேவையில்லாத செலவு” என்று தந்தை சொல்ல,

மருமகள், ”இதையெல்லாமா அவர்கிட்ட கேட்டுட்டு இருப்பீங்க, எல்லாத்துலயும் அரை அரை கிலோ வாங்கிட்டு வாங்க” என்றதும் குழந்தை தன் அம்மாவையும் சந்தோஷமாக பார்த்தான்!

இரண்டு கைகளிலும் நிறைய பழங்கள் ஹார்லிக்ஸ் என தாத்தாவுக்காக இவ்வளவு பொருட்களை சந்தோஷமாக வாங்கிவரும் அப்பாவை பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்தான்!

கார் கிளம்பியது. சிறிது நேர பயணத்துக்கு பின், கார் ஒரு கட்டிடத்தின் வாசலில் நின்றது.

அது ஒரு ‘முதியோர் இல்லம்!’

வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கணவன் மனைவி இருவரும் கஷ்டப்பட்டு சுமந்து சென்று உள்ளே வைத்தார்கள்.

”மருந்து எல்லாம் தவறாம சாப்பிடுங்கப்பா… எதாவது அவசரம்னா போன் பண்ணுங்க” என்றபடி இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு திரும்பிச்செல்ல….

முதல் நாள் பள்ளியில் விட்டுச்சென்ற குழந்தையைப்போல் அந்த முதியவர் தன் மகனையை பார்த்து நிற்க, பேரன் மட்டும் ஏதும் புரியாமல் டாடா காட்டியபடி சென்றான்!

கார் சென்றுகொண்டு இருந்தது. குழந்தை முன் சீட்டில் உட்கார்ந்திருக்க மனைவி பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள்!

ஏக்கத்துடன் குழந்தை, ”ஏன்பா தாத்தாவ நம்ப வீட்ல வச்சிக்காம இங்க விட்டுட்டு வர்றோம்?!”

தந்தை, ”தாத்தாவுக்கு வயசாயிடுச்சி இல்லையா, அதான் இங்க விட்டுட்டு வர்றோம்! இங்க இருந்தாதான் சந்தோஷமா இருப்பாரு…”

”அப்போ உங்களுக்கும் வயசாயிடுச்சின்னா நான் இங்கதான் கொண்டுவந்து விடனுமா….?!” என்ற குழந்தையின் கேள்வியில், அதிர்ந்துபோய் பிரேக்கை அழுத்த…. காதை கிழிக்கவேண்டிய சத்தம் ஏனோ அவர்களுக்கு நெஞ்சை கிழித்தது…
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved