வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

Published On Thursday, 19 January 2017 | 14:58:00


குவைத் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் கரீம் அல் கந்தாரி என்பவர் குவைத் மக்கள் தொகையை விட கூடுதலாக உள்ள வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக எதிர்வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி குவைத் பாராளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளதுடன் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவும் திரட்டி வருகின்றார்.

இந்த சிறப்பு விவாதத்தில் உள்கட்டமைப்புத் துறைகளான சுகாதாரம், கல்வி வசதிகள், போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் போன்றவற்றில் வெளிநாட்டினருக்கு பதிலாக குவைத்தியர்களை வேலைக்கு அமர்த்தவும், குவைத்திலிருந்து ஊழியர்கள் தங்கள் நாடுக்கு அனுப்பும் பணத்தின் அளவை கட்டுப்படுத்தவும், விலைவாசி உயர்வுகளால் குவைத்தியர் பாதிக்கப்படாமல் இருப்பது பற்றியும் பேசப்படவுள்ளது.

சொந்த நாட்டுக்குள்ளேயே குவைத்தியர்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர் அதாவது மொத்த மக்கள் தொகையான 4.4 மில்லியனில் 30 சதவிகிதமான 1.3 மில்லியன் மக்களே குவைத்தியர். மீதம் 3.1 மில்லியன் பேர் அதாவது 70 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர்.

குவைத் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் கரீம் அல் கந்தாரி அவர்களின் வாதப்படி, நாங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல அவர்களும் எங்கள் சகோதரர்களே, குவைத் வளர்ச்சியில், உள்கட்டமைப்பில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு மகத்தானதும் நன்றிக்குரியதுமாகும், அவர்களுக்கு எதிரான தூவேஷத்தை பரப்புவதும் நோக்கமல்ல என்றாலும் எங்கள் நாட்டு குடிமக்களைவிட வெளிநாட்டினர் அதிகமாக வசிக்கும் சமநிலையற்ற ஏற்றதாழ்வால் குவைத் நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு போன்ற உரிமைகளை இழந்தும், வெளிநாட்டினருக்காக செலவினத்தையும் கூடுதலாக சுமக்கும் நிலையில் உள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களை மொத்தமாக வெளியேற்றுவதும் எங்கள் நோக்கமல்ல மாறாக தகுதியான வேலைவாய்ப்புக்களில் குவைத்தியர்கள் மட்டுமே இனி நியமிக்கப்பட வேண்டும் மேலும் அதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இன்னும் சிலர், குறிப்பாக குவைத் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே பெண் எம்.பி யான ஸபா அல் ஹாசம் என்பவர், 3 முதல் 5 வருடத்திற்குள் தனியார் துறை ஊழியர்களை படிப்படியாக வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களே வெளியேறும் வகையில் வாழ்க்கைச் செலவினங்களை உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் மீது அதிகப்படியான வரிகளை விதிக்க வேண்டும் எனவும் இன்னும் சாலைகளை வெளிநாட்டினர் பயன்படுத்துவதற்கு கூட வரிவிதிக்க வேண்டும் என கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார் (ஒன்னுக்கே இவ்வளவா?)

அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கோருவது போல் சுகாதாரத் துறையில் மாற்றங்களை கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. டாக்டர்கள், நர்சுகள், தொழிற்நுட்ப வல்லுனர், நிர்வாகிகள், கணக்காளர்கள், சட்ட ஆலோசகர்கள் என பெருமளவில் வெளிநாட்டினர் வேலைசெய்து நிலையில் இவர்களுக்கு பதிலான மாற்று எண்ணிக்கையில் மருத்துவ துறை சார்ந்த கல்வி பயின்ற குவைத்தியர்கள் இல்லை.

உதாரணத்திற்கு குவைத் முழுவதும் பணியாற்றும் சுமார் 22,000 ஆண்,பெண் நர்சுகளில் வெறும் 6 சதவிகிதமே குவைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர்களில் 70 சதவிகிதம் பேர் வெளிநாட்டினரே என்பதால் சுகாதாரத்துறையில் மாற்றம் என்பது தற்போதைக்கு நடைமுறைபடுத்த இயலாத விஷயங்கள் என சொல்லப்படுகிறது.

குவைத் சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, குவைத்திலுள்ள சுமார் 3,500 பல் மருத்துவர்களில் 1,400 பேர் குவைத்தியர் என்பதும், இந்தத் துறையில் மட்டுமே பிற வெளிநாட்டினருடன் ஓரளவு சமநிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sources: Gulf News / Syndigate.info / Msn
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved