Saturday, 26 October 2019

மீண்டு வா சுஜித்! கண்ணீருடன் முழு உலகமே காத்திருப்பு!

மீண்டு வா சுஜித்! கண்ணீருடன் முழு உலகமே காத்திருப்பு!

தமிழ் நாடு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 23 மணித்தியாலத்திற்கும் மேலாக தொடர்கிறது.

இந்த நிலையில் குழந்தை சுஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்க முயற்சி எடுக்கப்படுகிறது. இடுக்கி போன்ற கருவியால் மீட்க முடியாவிடில் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 10 பேர் கொண்ட பேராசிரியர் குழு மீட்பு குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கண்ணீர் மல்க "மீண்டு வா சுஜித்" என புகைப்படத்தை கையில் ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளனர்.

சிறுவன் சுஜித்தை மீட்க தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் துவா செய்ய இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்காக வந்தவாசியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டுள்ளது.

Friday, 25 October 2019

கத்தாரில் காலவதியான உணவுப் பொருட்களுடன்  சிக்கிய களஞ்சியசாலை !

கத்தாரில் காலவதியான உணவுப் பொருட்களுடன் சிக்கிய களஞ்சியசாலை !

கத்தாரில் காலவதியான உணவுப் பொருட்களை சேமித்து வைத்து, அதற்கு புதிய திகதிகளையிட்டு மீள சந்தைக்கு அனுப்ப பயன்படுத்தப்பட்ட களஞ்சியசாலையொன்று அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அல் ராய்யான் நகராட்சி மையத்யத்தினல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலே இப்பறிமுதல் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காலவதியான உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் பணியாளர்களை் கொண்டு புதிய காலவதி திகதிகள் பொறிக்கப்பட்டு அந்த உணவுப் பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பும் பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அல் ராய்யான் நகராட்சி மையத்துக்கு சொந்தமான அல் முர்ரா பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றிலேயே இந்த நாசகார வேலை இடம்பெற்றுள்ளதாக நகராட்சி மையத்தின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 350 KG சூரியகாந்திவிதைகளும், 360KG தர்பூசனி விதைகளும், 30KG இனிப்பு பொருட்களும், மற்றும் 350KG ஏனைய இனிப்பு பொருட்களும் அடங்குகின்றன. இதில் கைது செய்யப்பட்டவர்கள் தகுந்தை சட்ட நடவடிக்கைளுக்கு உட்படுத்துப்படுவார்கள் என்பதோடு, மேற்படி களஞ்சில சாலைக்கு 60 நாட்கள் திறப்பதற்தான தடை மற்றும் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, 24 October 2019

கத்தார் டோஹாவில் நடாத்திய திடீர் சோதனையில் மேலும் இரண்டு உணவகங்கள் சிக்கின!

கத்தார் டோஹாவில் நடாத்திய திடீர் சோதனையில் மேலும் இரண்டு உணவகங்கள் சிக்கின!

கத்தார் நகராட்சி அதிகாரிகளினால் நடாத்தப்படும் திடீர் சோதனைகளில் மேலும் இரண்டு உணவகங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதீனா கலீபா மற்றும் பின் மஹ்மூத் போன்ற பகுதிகளில் இயங்கி வந்த இரு உணவகங்களே இவ்வாறு சிக்கியுள்ளதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

மதீனா கலீபாவில் அமைந்திருந்த உணவகம் பெருமளவிலான கோழி இறைச்சிகளை பேணுதலற்ற வகையில் சேமித்து வைத்துள்ளமையினாலும், சமைத்த இசை்சிகளை அறையொன்றில் முறையற்ற விதத்தில் பூட்டி சேமித்து வைத்திருந்தமையினால் பின் மஹ்மூத் பகுதியில் உள்ள உணவகத்துக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. 

தரமான, ஆரோக்கியமான உணுவுகளை கத்தார் வாழ் மக்களுக்கு வழங்கும் நோக்கில் அடிக்கடி இது போன்ற திடீர் சோதனைகளில் கத்தாரில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் இலங்கையர்களின் திடீர் மரணங்கள் குறித்து தூதுவருடன் கலந்துரையாடல்!

கத்தாரில் இலங்கையர்களின் திடீர் மரணங்கள் குறித்து தூதுவருடன் கலந்துரையாடல்!

CWF (COMMUNITY WELFARE FORUM) கத்தார் அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் கத்தாருக்கான இலங்கை தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கத்தார் இலங்கை தூதராலயத்தில் நடைபெற்றது.

இதன் போது CWF Qatar அமைப்பு மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் குறித்தும் எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும் CWF Qatar அமைப்பின் தலைவர் முஹமட் அக்ரம் இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து அண்மைக் காலங்களாக கத்தாரில் இடம்பெற்று வரும் இலங்கையர்களது திடீர் மரணங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் அவ்வாறு திடீர் மரணங்கள் நிகழுமிடத்து CWF Qatar அமைப்பு எவ்வாறு இதனை கையாளுகின்றது என்பது குறித்தும் CWF Qatar அமைப்பின் தலைவர் இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி, இவ்வாறான திடீர் மரணங்களுக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றும் இதற்கு CWF Qatar அமைப்பின் உதவி மிகவும் அவசியம் என்றும் வழியுறுத்தினார். மேலும் இவ்வாறான நிலைமை குறித்து கூடிய கவனம் செலுத்துவதாகவும் இவ்வாறான நிலைமைகளை கண்டறிவதற்கு மருத்துவ முகாம்கள் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் CWF Qatar அமைப்பு மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் நானும் எனது தூதரக அதிகாரிகளும் துணை நிற்போம் என கத்தாருக்கான இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி தெரிவித்தார்.

( முஸாதிக் முஜீப்)

Wednesday, 23 October 2019

கத்தார் எயார்வெய்ஸ் 2020ம் ஆண்டு மேலும் 40 விமானங்களைக் கொள்வனவு செய்கிறது!

கத்தார் எயார்வெய்ஸ் 2020ம் ஆண்டு மேலும் 40 விமானங்களைக் கொள்வனவு செய்கிறது!

உலகின் முன்னனி விமானச் சேவையான கத்தார் எயார்வெய்ஸ் எதிர்வரும் 2020ம் ஆண்டு 40 விமானங்களைக் கொள்வனவு செய்ய தீர்மானிததுள்ளதாக கத்தார் எயார்வெய்ஸ் உயா் அதிகாரி அக்பர் அல் பாகர்  தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் 1 வருடத்தில் அதிக விமானங்களைக் கொள்வனவு செய்த விமானச்சேவைகள் பட்டியல்களில் முன்னிலை வகிக்கும் என்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுவரை காலம் வருடத்துக்கு 35-36 வரையான விமானங்களை கத்தார் எயார்வெய்ஸ் கொள்வனது செய்து வந்துள்ளது. அந்த வரிசையில் அடுத்த வருடம் இந்த தொகையை 40 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கத்தார் எயார்வெய்ஸ் உலகின் சிறந்த விமானச் சேவையாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கத்தாரிலுள்ள இலங்கை, இந்திய, பங்களாதேஷ் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

கத்தாரிலுள்ள இலங்கை, இந்திய, பங்களாதேஷ் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

கத்தாரில் பணிபுரியும் குறைந்த வருமானம் பெறும் ஆசிய நாட்டவர்களுக்கான 17வது மருத்துவ முகாம் எதிர்வரும் 25ம் திகதி கத்தார் அல்துமாமா மருத்துவ நிலையத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறவுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் நேபால் போன்ற நாடுகளைப் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களின் ஆரோக்கியம் கருதியே இந்த மருத்துவ முகாம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவ முகாமானது வருடத்துக்கு ஒருமுறை ஹமத் வைத்தியசாலையின் உதவியுடன் கத்தார் சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்டு வருகின்றது. மேற்படி மருத்துவ முகாமில் 2500 வரையான ஆசிய நாட்டு பணியாளர்கள் கலந்து பயன் பெறுவார்கள் என்பதாக ஏற்பாட்டுக் குழு சார்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த யுவதி! வைரலாகும் புகைப்படங்கள்

ஒரே நாளில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த யுவதி! வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.அதிலும் , குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார்.

அத்துடன் மாணவர்களை மிகவும் கன்னியமான முறையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதனை பிரதிபலிக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞரும், பேராசிரியருமான தசுன் நிலன்ஜன குறித்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படப்பிடிப்பு கம்பஹா நிட்டம்புவ – அத்தனகல ரஜமஹா விஹாரையில் நடத்தப்பட்டுள்ளது.பெரும்பான்மை சமூகத்திற்கும், சிறுபான்மை சமூகத்திற்கும் இடையில் ஏதோ வகையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், இன்று ஒரு சிங்கள யுவதியை பகிரங்கமாகவே வர்ணிக்கும் அளவிற்கு நல்லிணக்கம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஹிருஷி வசுந்தராவின் புகைப்படங்கள் தமிழ் இளைஞர்களால் பகிரப்பட்டுள்ளமை ஆதாரமாக திகழ்கின்றதாகவும் புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் நிலன்ஜன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அத்துடன் , நாட்டிற்கு இவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாம் அனைவரும் பொதுவாக உணர்வுகளையே சுமந்தே செல்வதாகவும், ஏன் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

மேலும் , நாங்கள் அனைவரும் ஒரே தாய்நாட்டையே பகிர்ந்துக் கொள்கின்றோம் எனவும், நாம் அனைவரும் அதனையே மதிக்கின்றோம் எனவும் புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் நிலன்ஜன தெரிவித்துள்ளார்.


Tuesday, 22 October 2019

கோத்தாபயவுக்கு ஆதரவாக, களத்தில் குதித்தார் தில்சான்

கோத்தாபயவுக்கு ஆதரவாக, களத்தில் குதித்தார் தில்சான்

2015 இல் செய்த தவறுகளை மக்கள மீண்டும் செய்யக்கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்சான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபயவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2015 இல் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றப்பட்டனர் என தில்சான் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச இராணுவத்தில் இணைந்தவேளை எப்படி இந்த நாட்டை நேசித்தாரோ அதுபோலவே இன்றும் நாட்டை நேசிக்கின்றார் என தில்சான் தெரிவித்துள்ளார்.

நாட்டையும் எதிர்கால தலைமுறையையும் பாதுகாப்பதற்காக நாட்டை கோத்தாபயரஜபக்சவிடம் கையளிக்கவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியம் பிரஜைகள் யாரும் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை!

ஐக்கிய அரபு இராச்சியம் பிரஜைகள் யாரும் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை!

கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் தம் நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு புதிதாக பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சு தம் நாட்டு பிரஜைகளுக்கு இலங்கைக்கான பயணத்தடையை விதித்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சு தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரஜைகள் மிக அவசரமான சந்தர்ப்பங்களை தவிர்த்து வேறெந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு பயணிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சு, பயணிகள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் தவாஜூடி சேவை(Twajudi service ) எனப்படும் அமைச்சின் வலைத்தளம் அல்லது UAEMOFA எனப்படும் ஸ்மார்ட் செயலியில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, இந்த இணைய சேவை மூலம் அந்நாட்டு பிரஜைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சுடன் தொடர்பில் இருப்பதுடன் தாம் பயணம் செய்யும் நாடுகளில் ஏற்படக்கூடிய அவசரநிலைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளின் போது வெளியுறவு அமைச்சுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தம் நாட்டு பிரஜைகளுக்கு இந்த பயணத் தடையை விதித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

Monday, 21 October 2019

கத்தார் டோஹா பகுதியில் சோதனையின் போது சிக்கிய 10 உணவகங்கள்! (படங்கள்)

கத்தார் டோஹா பகுதியில் சோதனையின் போது சிக்கிய 10 உணவகங்கள்! (படங்கள்)

கத்தாரின் டோஹா நகராட்சி மையத்தின் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது 10 உணவகங்கள் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தரமற்ற வகையில் உணவுகள் சமைத்து வைக்கப்பட்டிருந்தமை மற்றும் சமையற் பொருட்கள் ஒழுங்கான முறையில் சோமித்து வைக்கப்பட்டிருக்காமை போன்ற தவறுகளால் உணவகங்கள் சிக்கியுள்ளன. 

மேற்படி உணவகங்களுக்கு குற்றங்களுக்கு ஏற்றாற் போல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் உணவகங்கள், சூபர்மாட்க்கட்டுக்கள், வெதுப்பகங்கள் போன்றவையும் உள்ளடங்கியுள்ளன.

"குர்துகளின் தலைகளை நசுக்குவோம்" - துருக்கி அதிபர் எச்சரிக்கை

"குர்துகளின் தலைகளை நசுக்குவோம்" - துருக்கி அதிபர் எச்சரிக்கை

வடக்கு சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து வெளியேறாவிட்டால், குர்து போராளிகளின் "தலைகளை நசுக்குவோம்" என்று துருக்கியின் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குர்துகள் வடக்கு சிரியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பின்வாங்கும் வகையில், ஐந்து நாட்களுக்கு தாக்குதலை இடைநிறுத்தும் உடன்படிக்கைக்கு கடந்த வியாழக்கிழமை துருக்கி ஒப்புக்கொண்டது.

ஆனால், நேற்று (சனிக்கிழமை) போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரண்டு தரப்பினரும் ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.

குர்து போராளிகளை பயங்கரவாதிகளாக கருதும் துருக்கி, சிரியாவுக்குள்ளேயே 'பாதுகாப்பு மண்டலம்' ஒன்றை உருவாக்குவதற்கு விரும்புகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று வரும் செவ்வாய்கிழமைக்குள் குர்துகள் அந்த குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேறவில்லை என்றால், "நாங்கள் விட்ட இடத்தில் இருந்து தாக்குதலை ஆரம்பித்து, பயங்கரவாதிகளின் தலைகளை தொடர்ந்து நசுக்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு 6 மாதம்: இதுவரை நடந்தது என்ன?

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு 6 மாதம்: இதுவரை நடந்தது என்ன?

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 மாதங்களாகின்றன.
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்கள் மீது ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்துடன், கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பேரி, ஷங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின் 259 பேர் இறந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தனர்.

விசாரணை

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு நேரடியாக தொடர்பு கொண்டிருப்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக சுமார் 293 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 178 சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சந்தேக நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை

இலங்கை நாடாளுமன்றம்
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நியமிக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களாக அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை புறக்கணித்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முப்படை தளபதிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி ஒருவரிடம் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறை.
இலங்கை நாடாளுமன்றம்
இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போலீஸ் மாஅதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள பின்னணியில், தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை மறுதினம் (23) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அவசர காலச் சட்டம்

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
மக்கள்
ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமல்படுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 4 மாதங்கள் நாடாளுமன்றத்தில் நீடிக்கப்பட்ட அவசர காலச் சட்டம், நான்கு மாதங்களின் பின்னர் நீக்கப்பட்டது.

தேசிய தௌஹித் ஜமாத் உறுப்பினர்கள் கைது

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் சகல உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஜுன் மாதம் 23ஆம் தேதி அறிவித்தார்.
போலீஸார் மற்றும் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் பிரகாரம், அனைத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறை பாதிப்பு

இலங்கையின் சுற்றுலாத்துறை யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மிக வேகமாக வளர்ச்சி அடைந்திருந்தது.
கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டே இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் 2018ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
data
2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர்.
எனினும், ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வீழ்ச்சி அடைந்தது.
வெளிநாட்டு சுற்றுலாத் துறையினருக்கு வழிகாட்டியாக செயற்படும் கொழும்புவை சேர்ந்த அருண் பாரதியிடம் பி.பி.சி தமிழ் வினவியது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்ட நாள் முதல் சுமார் மூன்று மாதங்கள் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
''சுற்றுலாத்துறையையே நாம் முழுமையாக நம்பி இருக்கின்றோம்;. வெளிநாட்டவர்கள் வந்தால் மாத்திரமே எமக்கு வருமானம். பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் வருமானம் முழுமையாக இல்லாது போனது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கூட சுற்றுலா செல்வதை தவிர்த்திருந்தார்கள். 90 சதவீத வருமானம் மூன்று மாதங்கள் இருக்கவில்லை. வாகனங்களுக்கான குத்தகையை கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜுலை மாதத்தின் பின்னர் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது" என அவர் கூறினார்.
ராஜகோபால் விவேகானந்தன்
Image captionராஜகோபால் விவேகானந்தன்
ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தமது வருமானம் முழுமையாக பாதிக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை வழிகாட்டி ராஜகோபால் விவேகானந்தன் தெரிவிக்கின்றார்.
கடந்த ஜுலை மாதத்திற்கு பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் வழமைக்கு திரும்பிய போதிலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் தமது தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நாட்டில் தேர்தல் ஒன்று நடக்கும் சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறையினரின் வருகை குறைவடையும் என்கிறார் அவர்.
இவ்வாறான நிலையில் இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, தற்போது இலங்கை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் - பயண தூரம் 18 மணித்தியாலங்கள்

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் - பயண தூரம் 18 மணித்தியாலங்கள்

ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது.

அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது.

2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை திட்டங்கள் நிறைவேறினால் 2022 அல்லது 2023ஆம் ஆண்டுக்களில் இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவைகள் இயக்கப்படும்.

எந்தவொரு பயணிகள் விமானமும் இவ்வாறு முழுமையாக பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றி செல்லும் வசதிகளுடன் இவ்வளவு நீண்ட தூர பயணப் பாதையில் இயங்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.படத்தின் காப்புரிமைAFP/HANDOUTImage captionபோயிங் 787-9 ரக விமானம்

கிழக்கு ஆஸ்திரேலியாவை கடந்து இரவு நேரம் வரை பயணிகள் விழித்திருந்தனர், ஆறு மணி நேரத்திற்கு பிறகு நல்ல கார்போஹைட்ரேட் உணவு வழங்கப்பட்டது.

இந்த விமான சோதனையில் விமான ஓட்டுனரின் மூளையின் சிற்றலை செயல்பாடு மெலடோனின் அளவுகள், எச்சரிக்கை தன்மை, மற்றும் பயணிகளுக்கான உடற்பயிற்சி வகுப்புகள் மேலும் பல மணி நேரம் பயணம் செய்வதால் பயணிகளின் உடலில் ஏற்படும் தாக்கம் பற்றிய பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.

விமான போக்குவரத்து சேவையில் இது மிக முக்கியனது. உலகின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மக்கள் எவ்வாறு பயணிக்கிறார்கள் என்பதை துரிதத்தப்படுத்தும் ஒரு வழக்கமான சேவையின் மாதிரிதான் என்று குவாண்டாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆலென் ஜோய்ஸ் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாக இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களை இயக்குவதில் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது .

கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் , சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் வரை கிட்டத்தட்ட 19 மணிநேரம் பயணிக்கும் நீண்ட தூர விமானத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இதுவே உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் வழக்கமான பயணிகள் விமானமாக தற்போது விளங்குகிறது.

கடந்த ஆண்டு, குவாண்டாஸ் பெர்த்தில் இருந்து லண்டனுக்கு 17 மணி நேர இடைவிடாத விமான சேவையைத் துவங்கியது , அதே நேரத்தில் கத்தார் ஏர்வேஸ் ஆக்லாந்து மற்றும் தோஹாவுக்கு இடையே 17.5 மணி நேர சேவையை இயக்குகிறது.
வைத்தியசாலைக்குள் மனைவியை கத்தியால் குத்த முயன்ற பிரதேசசபை உறுப்பினர் கைது!

வைத்தியசாலைக்குள் மனைவியை கத்தியால் குத்த முயன்ற பிரதேசசபை உறுப்பினர் கைது!

சிலாபம் பொது மருத்துவமனையில் பணியாற்றும் தனது மனைவியை கத்தியால் குத்த முயன்ற சிலாபம் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் கடமையில் இருந்த மனைவியுடன் பிரதேசசபை உறுப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மனைவியை கத்தியால் குத்த முயன்றபோது, பாதுகாப்பு அதிகாரிகள் தலையிடடு, கத்திக்குத்திலிருந்து தடுத்தனர்.

பின்னர் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கணவர் தன்னுடன் எப்பொழுதும் சண்டையிட்டு துன்புறுத்துவதாக மனைவி ஏற்கனவே மெதம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததும் குறிப்பிடத்தககது.